Tuesday 8 October 2013

குழந்தையின் படகு...



பிஞ்சு கைகளிலே காகிதம் படகாய்
மாறி கடலாகி போன மழை நீரில்
மிதக்க தயாராய் 

விட்ட படகு மெல்லிய காற்றின் 
திசையில் செல்ல தன் கண்டுபிடிப்பின் 
வெற்றியை குழந்தை ரசிக்க 

வந்தது எங்கிருந்தோ மழை 

விழியோரம் கண்ணீர் நெஞ்சிலோ 
சொல்லமுடியாத வலி தன் முன்னே
தன் படகு தண்ணீரில் முங்குவதை
காண சகிக்க முடியாத குழந்தைக்கு 

ஆனால் காகித படகோ வாழ்க்கை 
தத்துவத்தை மிக எளிதாக புரிய வைத்தது 
அருகில் நின்று அதை பார்த்து 

கொண்டிருந்த வாலிபனுக்கு.. 

Monday 7 October 2013

உனக்கான காத்திருப்பு...



உன் நினைவுகளின் 
அழுகைக்குள் 
என் நினைவுகள் 

தண்டவாளத்தில் 
பயணிப்பதுபோல் 
திருப்பங்களில்லாத 
பயணங்களில் 

இணையவேண்டிய இடம் வரை 
இரட்டையாகவே 
ஓடிக்கொண்டிருக்கின்ற தெருக்களில் 
சொல்லிக்கொள்ளாத மௌனம் 

இறங்குதலும் ஏறுதலுமான 
பயணங்களில் 
மீண்டும் ஒரு முறை 
சந்திக்க நேரலாம் 

அப்பொழுதாவது சொல்லி விடு 
பதில் தெரியாத 
கேள்விகளுக்குத்தான் 
நீண்ட அர்த்தங்கள் 

ஏதாவது சொல்லி விடு 
மௌனித்து விடாதே 
உன் மௌனத்துக்குப் பின் 
மீண்டும் ஒரு சந்திப்புக்காக 
நான் காத்திருக்க நேரலாம் 

Thursday 3 October 2013

உனக்கான வரிகள்



















நான் யாருக்கேனும் எழுதும் வரிகளிலும் உனக்கான வார்த்தைகள் இருக்கும் நீ யாருக்கேனும் இசைக்கும் கானத்திலும் எனக்கான இதமிருக்கும் அடையாளம் காணும் ஆழ் பரப்பில் அர்த்தப்படுகின்றன எல்லா வரிகளும் எல்லோருக்குமான பாடல்களும்.

Monday 23 September 2013

எத்திசைப் பயணம்?















கொடுப்பதுமின்றி
எடுப்பதுமின்றி
புரிதலில் ஊறிய
பேச்சுக்கள்
உனக்குமெனக்குமான
உள்ள வாசல்கள்.

தொடுகையின் நேரத்தில்
சலனமற்ற உனது விரல்கள்
வசந்த காலப் பொழுதின்
புதிய தளிர்களாய்
என்னுள்.

உன் வேர்கள்
உனக்கான இடத்திலேயே
இருப்பதும் உன்
இலைகள் எனக்கான
இடத்தில் நிழல்
தருவதுமே காதலின் சாட்சி.

எனது வாழ்க்கை
பயணத்தில் நமது
பிரிவைக் கடக்கவல்ல
துடுப்பைப் பரிமாறிச்
சென்று கொண்டிருக்கிறாய்

எனக்கெதிரான திசையில்.

Thursday 19 September 2013

நிறமில்லா மழை


சொல்லாத நிறத்தில் நினைவுகள்
சொல்லாத நிறத்தில் ஒரு மழை...
கருப்பு சட்டமிட்ட ஜன்னலுக்கு வெளியே
நான் வானம் பார்த்து கொண்டு இருந்தேன்
எல்லாரும் சொல்வது போல
அது நீல நிறமாக இல்லை
அதன் நிறம் எனக்கு நினைவில்லாத
ஒரு நிறமாகவே இருந்தது
மேகங்கள் அற்ற வெறுமையான
வானத்தில் சில நட்சத்திரங்கள் இருந்தன
நீ வரும்போதெல்லாம் வானத்தின்
நிறத்திலேயே உடையணிந்து வருவாய்..
பின்னர் பிரிந்து இருந்த ஒரு தருணத்தின்
உரையாடலின் போது
நிறம் என்று ஏதுமில்லை என்றும்
அது ஒரு அடையாளம் என்றும் பேசினோம்...
நான் அடையாளம் கண்டு கொண்ட
நிறங்களில் வானம் இருந்த போதெல்லாம்
கருப்பு சட்டமிட்ட சன்னல்களுக்கு

வெளியே மழை இருந்தது...

Sunday 1 September 2013

அப்பா...
















கரு கொடுத்து உருவாக்கினாய்
விரல் பிடித்து நடை பழக்கினாய்
கண்டிப்புடன் கல்வி தந்தாய்
பணிவுடன் பாசமும் பொறுமையும் தந்தாய்
நம்பிக்கையுடன் கல்லூரி செல்கையில்
தைரியம் என்ற ஆயுதம் பழக செய்தாய்
தன்னம்பிகையுடன் பணிக்கு செல்லும்போது
தன் கடமை முடிந்ததாய் 
உன் இதயம் ஓய்வு எடுத்தபோதும் 
தவித்து நின்றால் உன் முயற்சிகள் 
தோற்றுவிடும் – என நீ கற்றுதத்த 
பாடங்களின் உதவியுடன் உன் ஆசிர்வாதங்களுடனும்
என் ஆயுளுக்கும் ஓடி கொண்டிருப்பேன்.
உன் மரணம் கூட எனக்கு பாடம் தந்தது,  என் தந்தையே!!!

Friday 30 August 2013

மருந்திட்ட எழுத்து...














கவிதையால் 
கையை சுட்டுக் கொண்டேன். 
காயங்கள் 
ஆறாது வலித்தன. 
எழுத்துகள் 
சில எடுத்து மருந்திட்டேன். 
கற்பனைகளோ 
கண்ணீராய் எட்டி பார்த்தன. 
ஒவ்வொரு கணமும் 
காயங்கள் கரைந்தே வந்தன. 
இருந்த கைகளில் 
இருப்பு ஏதுமின்றி முழுதும் கரைந்தன. 
இப்பொழுது 
காயமுமில்லை. 
கவிதைகளுமில்லை. 

கைகளுமில்லை....